சேலத்தில் டீக்கடை ஊழியரிடம் கத்திமுனையில் பணம் பறிப்பு-வாலிபர் கைது
சேலத்தில் டீக்கடை ஊழியரிடம் கத்திமுனையில் பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சேலம்:
சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 40). இவர் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள டீக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். மாரியப்பன் நேற்று அங்கம்மாள் காலனி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்கள் அவரை வழிமறித்தனர்.
பின்னர் அவர்கள் மாரியப்பனை கத்தியை காட்டி மிரட்டி ரூ.550-யை பறித்து சென்றனர். இதுகுறித்து அவர் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மாரியப்பனிடம் பணம் பறித்தது ஈரோட்டை சேர்ந்த விவேக் (22) மற்றும் அவருடைய கூட்டாளி சக்திவேல் என்பது தெரியவந்தது.
இதில் விவேக்கை போலீசார் கைது செய்தனர். இவர் மீது பள்ளப்பட்டி, பள்ளிப்பாளையம், அந்தியூர், ஈரோடு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் பதிவாகி இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. சக்திவேலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.