சேலம் பள்ளப்பட்டி போலீஸ் நிலைய பகுதியில் 162 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
சேலம் பள்ளப்பட்டி போலீஸ் நிலைய பகுதியில் 162 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அவற்றை போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.;
சேலம்:
சேலம் பள்ளப்பட்டி போலீஸ் நிலைய பகுதியில் 162 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அவற்றை போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.
கண்காணிப்பு கேமராக்கள்
சேலம் பள்ளப்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அங்கம்மாள் காலனி, குப்தா நகர், புதிய பஸ்நிலையம், மெய்யனூர், கல்லாங்குத்து, டி.வி.எஸ். பஸ் நிறுத்தம், அரிசிபாளையம், வீரபாண்டியார் நகர் உள்பட 57 இடங்களில் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் 162 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதன் செயல்பாட்டை தொடங்கி வைக்கும் விழா சேலம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல்ஹோடா தலைமை தாங்கினார். போலீஸ் துணை கமிஷனர்கள் மோகன்ராஜ், மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன் வரவேற்றார்.
பங்களிப்பு அதிகம்
இதையடுத்து 162 கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் விழாவில் அவர் பேசியதாவது:-
கண்காணிப்பு கேமராக்கள் எப்போதும் ஓய்வில்லாமல் உழைத்து கொண்டிருக்கிறது. குற்றவாளிகளை கண்டுபிடிக்க கண்காணிப்பு கேமராக்களின் பங்களிப்பு அதிகம். வீடுகள் மற்றும் கடைகளில் கேமராக்களை பொருத்த வணிகர்கள், பொதுமக்கள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் நுண்ணறிவு பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் சரவணன், இன்ஸ்பெக்டர்கள் தங்கபாண்டியன், ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கூடுதல் போலீஸ் துணை கமிஷனர் கும்மராஜா நன்றி கூறினார்.