கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

Update: 2022-05-06 22:13 GMT
அன்னவாசல்:

குளிக்க சென்றனர்
அன்னவாசல் அருகே உள்ள புல்வயல் கிராமத்தை சேர்ந்தவர் அப்துல்லா. இவரது மகன் முகமது ஆசாத் (வயது 19). சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரம்ஜான் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் முகமதுஆசாத், அவரது நண்பர் வினோத் மற்றும் பழனிச்சாமி ஆகியோருடன் பெருமநாட்டில் ஒரு தனியார் கல்லூரி அருகே உள்ள ஒரு கிணற்றில் குளிக்க சென்றார்.
அங்கு 2 பேர் சாகசம் செய்து குளிப்பதை ஒருவர் செல்போனில் படம் பிடித்துள்ளார். பின்னர் ஒவ்வொருவராக கிணற்றில் குதித்துள்ளனர். இதில் முகமது ஆசாத் தண்ணீரில் குதித்தபோது கிணற்றின் பக்கவாட்டு சுவரில் தலைமோதி பலத்த காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. குதித்த சிறிது நேரத்தில் தலையில் கைவைத்தவாறு மயங்கிய முகமது ஆசாத், தண்ணீரில் மூழ்கியுள்ளார். இது அனைத்தும் நண்பர்களின் செல்போனில் பதிவாகியுள்ளது. மேலும் செய்வதறியாது அவர்கள் திகைத்தனர்.
பிணமாக மீட்பு
இந்நிலையில் இதுகுறித்து அப்பகுதியினர் சிப்காட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் முகமது ஆசாத்தின் உடலை தண்ணீரில் இருந்து மேலே கொண்டு வந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அன்னவாசல் போலீசார் முகமது ஆசாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரம்ஜான் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்த கல்லூரி மாணவர் கிணற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்