சரக்கு வேனில் கடத்தப்பட்ட 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
சரக்கு வேனில் கடத்தப்பட்ட 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
அறந்தாங்கி:
சரக்கு வேனை மடக்கி பிடித்தனர்
அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவிலில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஒரு சரக்கு வேன், மூட்டைகளை ஏற்றிக்கொண்டு நாகுடி வழியாக வந்துள்ளது. நாகுடியில் இரவு நேர பணியில் இருந்த போலீஸ்காரர் அந்தோணி தேவராஜ், அந்த சரக்கு வேனை நிறுத்த முயன்றபோது, அவரை இடிப்பது போல் சரக்கு வேனை டிரைவர் ஓட்டிச்சென்றுள்ளார்.
இது குறித்து அறந்தாங்கியில் இரவு நேர காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள் மாசிலாமணி, ராஜேந்திரன், சேகர், நெடுஞ்சாலை ரோந்து போலீசார் துரைமுருகன், ரமேஷ் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் தயார் நிலையில் இருந்துள்ளனர். அறந்தாங்கி கோட்டை சிவன் கோவில் அருகே வந்தபோது சரக்கு வேனை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் அதில் இருந்த டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.
ரேஷன் அரிசி பறிமுதல்
விசாரணையில், சரக்கு வேனை ஓட்டி வந்தவர் புதுநிலைபட்டியை சேர்ந்த கணபதி(வயது 43) என்பதும், அந்த வேனில் 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்ததும், ஆவுடையார்கோவிலில் இருந்து பனயவயல், அரியமரக்காடு, அறந்தாங்கி வழியாக புதுவயலில் உள்ள ஒரு அரிசி அரவை ஆலைக்கு, ரேஷன் அரிசியை கடத்தி சென்றதும், விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அரிசியை பறிமுதல் செய்த அறந்தாங்கி போலீசார், குடிமை பொருள் வழங்கல் அலுவலர் பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.