ஆக்கிரமிப்பு அகற்றம்
நாட்டாணி புரசக்குடியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
ஆவுடையார்கோவில்:
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட நாட்டாணி புரசக்குடி ஊராட்சியில் உள்ள நாட்டாணி புரசக்குடி கிராமத்தில் ஏரி புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு, ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பை அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. இதையொட்டி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வீரமுத்து, தாசில்தார் அலுவலக வருவாய் ஆய்வாளர் விஜயா மற்றும் மின்வாரிய ஊழியர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் போலீசார் அங்கு வந்திருந்தனர். இதில் பொக்லைன் எந்திரம் மூலம் ஒரு வீடு இடிக்கப்பட்டு, 5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
இந்நிலையில் வீடு இடிக்கப்பட்ட சம்பவம் ஒரு தரப்பினரிடையே குமுறலை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மேலும் ஒரு தரப்பை சேர்ந்தவர்களிடம் மட்டுமின்றி, அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற அதிகாரிகள் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.