மாமனாரை தாக்கியதாக மருமகள்கள் உள்பட 4 பேர் மீது வழக்கு

மாமனாரை தாக்கியதாக மருமகள்கள் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-05-06 22:12 GMT
வடகாடு:
வடகாடு அருகே உள்ள மாங்காடு மாங்காட்டான் கொல்லை பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன்(வயது 72). இவரது மகன்கள் 2 பேரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் விஸ்வநாதன் மது அருந்திவிட்டு வந்து தனது மருமகள்களான நந்தினி, சுப்ரியா ஆகியோரிடம் தகராறு செய்து வந்ததாகவும், இது குறித்து நந்தினி கடந்த மாதம் வடகாடு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் 2-வது மருமகளான சுப்ரியாவின் பெற்றோரான கிருஷ்ணன், சாவித்ரி ஆகியோர் இது குறித்து விஸ்வநாதனிடம் கேட்டபோது, அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மருமகள்கள் உள்பட 4 பேர் சேர்ந்து ரீப்பர் சட்டம் மற்றும் கட்டையை கொண்டு விஸ்வநாதனை தாக்கியதாகவும், இதில் அவரது மண்டை உடைந்ததாகவும், இதையடுத்து அவர் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து விஸ்வநாதன் கொடுத்த புகாரின்பேரில் வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்