நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நேற்று காலை நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாலபாரதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மோகன், சுடலைராஜ், பெருமாள் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
வீடு இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா அல்லது அரசு கட்டித்தரும் வீடுகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். கோவில் நிலங்கள், மடத்து இடங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும். விவசாயிகளின் குத்தகை இனங்களை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இவ்வாறு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியவர்களிடம் இருந்து அதிகாரிகள் மனுக்களை பெற தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள், கலெக்டர் அலுவலகம் முன்புள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, மனு கொடுக்க ஏற்பாடு செய்தனர். இதையடுத்து அங்கு வந்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனித்தனியாக எழுதி இருந்த மனுக்களை நிர்வாகிகள் மூலம் கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் வழங்கினர்.
\