மூதாட்டியின் உடலை மகளின் விருப்பப்படி அடக்கம் செய்யலாம்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மூதாட்டியின் உடலை மகளின் விருப்பப்படி அடக்கம் செய்யலாம் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால் அவரது பிள்ளைகளுக்கு இடையே இருந்த போட்டிக்கு முடிவு ஏற்பட்டுள்ளது.
மதுரை,
மூதாட்டியின் உடலை மகளின் விருப்பப்படி அடக்கம் செய்யலாம் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால் அவரது பிள்ளைகளுக்கு இடையே இருந்த போட்டிக்கு முடிவு ஏற்பட்டுள்ளது.
மூதாட்டி சாவு
நாகர்கோவிலை அடுத்த என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள மேலக்காட்டு விளையைச் சேர்ந்தவர் குருசாமி நாடார். இவருடைய மனைவி பாஞ்சாலி (வயது 77). இவர்களுக்கு ராஜப்பா என்ற மகனும், உமாமகேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 2017-ம் ஆண்டு குருசாமி இறந்தார். அதன்பிறகு பாஞ்சாலி என்.ஜி.ஓ. காலனி அருகில் பிள்ளையார்புரத்தில் உள்ள உமாமகேஸ்வரி வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஞ்சாலி இறந்தார்.
இதை அறிந்த ராஜப்பா, தனது தாயார் சாவில் சந்தேகம் இருப்பதாக சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அடக்கம் செய்வதில் போட்டி
அதைத்தொடர்ந்து சுசீந்திரம் போலீசார் பாஞ்சாலி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உடல் சவக்கிடங்கில் வைக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே பாஞ்சாலியின் உடலை தங்களிடம் ஒப்படைக்குமாறு ராஜப்பா மற்றும் உமாமகேஸ்வரி ஆகியோர் தனித்தனியாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர். இருதரப்பினரும் திரண்டு வந்து மனு கொடுத்ததால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
ஐகோர்ட்டில் வழக்கு
இந்த சூழ்நிலையில் ராஜப்பா, மதுரை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், எனது தாயார் பாஞ்சாலி உடலை, சொந்த ஊரில் எனது தந்தை உடலை அடக்கம் செய்ததற்கு அருகில் அடக்கம் செய்ய அனுமதித்து உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.இந்த வழக்கை நேற்று நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார்.
அப்போது மனுதாரரின் சகோதரி உமா மகேஸ்வரி சார்பில் ஆஜரான வக்கீல், பாஞ்சாலியை கடந்த 7 ஆண்டுகளாக அவரது மகள் உமா மகேஸ்வரி தான் பராமரித்து வந்துள்ளார். எனவே அவரது உடலை உமா மகேஸ்வரி விருப்பத்தின்பேரில் அவர் வசிக்கும் பிள்ளையார்புரத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வாதாடினார்.
அப்போது மனுதாரர் வக்கீல், மனுதாரரின் தாயார் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு மனுதாரர் தரப்பினரை, உமா மகேஸ்வரி தரப்பில் அனுமதிக்க மறுக்கின்றனர் என தெரிவித்தார்.
மகள் விருப்பப்படி அடக்கம்
விசாரணை முடிவில், பாஞ்சாலியை அவரது மகள் உமா மகேஸ்வரி கடந்த 7 ஆண்டுகளாக பராமரித்து வந்துள்ளார். எனவே அவரின் விருப்பப்படி பிள்ளையார்புரத்தில் பாஞ்சாலியின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இறுதிச்சடங்கில் ஒரு மகனாக ராஜப்பா, தனது கடமையை செய்யலாம்.
ராஜப்பா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் உமா மகேஸ்வரி தரப்பினர் எந்த பிரச்சினையிலும் ஈடுபடக்கூடாது. பாஞ்சாலியின் உடலை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கொண்டு வந்து, அடக்கம் செய்யும் வரை தேவையான பாதுகாப்பை சுசீந்திரம் போலீசார் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.