காங்கிரஸ் மீது மந்திரி அரக ஞானேந்திரா குற்றச்சாட்டு
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விசாரணையை திசை திருப்ப முயற்சி செய்வதாக காங்கிரஸ் மீது மந்திரி அரக ஞானேந்திரா குற்றம்சாட்டியுள்ளார்.
கலபுரகி: சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விசாரணையை திசை திருப்ப முயற்சி செய்வதாக காங்கிரஸ் மீது மந்திரி அரக ஞானேந்திரா குற்றம்சாட்டியுள்ளார்.
போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கலபுரகியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
விசாரணைக்கு ஆஜராகவில்லை
சித்தராமையாவுக்கு சுதந்திரமாக பேச உரிமை உள்ளது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் ரூ.300 கோடி பரிமாற்றம் நடந்துள்ளதாக அவர் கூறுகிறார். ரூ.200 கோடி, ரூ.300 கோடி அல்லது ரூ.3 ஆயிரம் கோடி கூட பரிமாற்றம் நடந்திருப்பதாக கூறலாம். ஆனால் அதற்கு ஆதாரங்கள் வழங்குமாறு நாங்கள் கேட்கிறோம். ஆனால் ஆதாரங்களை வழங்காமல் ஓடி போகிறார்.
முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கேவுக்கு மூன்று முறை போலீசார் நோட்டீசு அனுப்பி விசாரணைக்கு ஆஜராகும்படி கூறியுள்ளனர். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. சி.ஐ.டி. போலீசாரின் விசாரணையை திசை திருப்ப காங்கிரசார் முயற்சி செய்கிறார்கள். ஏனென்றால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில தலைவர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.
விசாரணை நடத்துவோம்
தங்களின் தவறுகள் வெளியே வருவதால் அரசு மீது குற்றம்சாட்டுகிறார்கள். நேர்மையாக செயல்பட்டு வரும் உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் புகழுக்கு களங்கம் விளைவிக்க காங்கிரசார் முயற்சி செய்கிறார்கள். விசாரணை பாரபட்சற்ற முறையில் சுதந்திரமாக நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் தலைவர்கள் என்ன விரும்புகிறார்களோ அதை பேசட்டும்.
ஆனால் நாங்கள் சரியான முறையில் விசாரணை நடத்துவோம். முறைகேட்டின் வேரை கண்டுபிடிக்க நாங்கள் முயற்சி செய்கிறோம். இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும். அது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.
இவ்வாறு அரக ஞானேந்திரா கூறினார்.
பாஸ்கர்ராவ்
முன்னாள் பெங்களூரு போலீஸ் கமிஷனரும், ஆம் ஆத்மி கட்சி நிர்வாகியுமான பாஸ்கர்ராவ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், ‘சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் ரூ.300 கோடி பரிமாற்றம் நடந்துள்ளதாக முன்னாள் முதல்-மந்திரி கூறியுள்ளார். அதுபற்றி விசாரணை நடத்த வேண்டும். கூடுதல் டி.ஜி.பி.யை இந்த அரசு பணி நீக்கம் செய்துள்ளது. அவர் வாய் திறந்தால் இரு கட்சிகளும் சிக்கலில் சிக்கும்’ என்றார்.