எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் தேர்வு எளிதாக இருந்தது
எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் தேர்வு எளிதாக இருந்தது என மாணவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
விருதுநகர்,
எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாக மாணவ-மாணவிகள் கூறினர். இதுகுறித்து விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
ஆதர்ஷினி
2 ஆண்டுகளாக பொதுத்தேர்வு நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு எங்களுக்கு பொதுத்தேர்வு எழுத வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி அளித்தது. நேற்று தமிழ் தேர்வு எழுதி உள்ளோம். வினாக்கள் மிகவும் எளிதாக இருந்தது. 1 மதிப்பெண் கேள்வி, 8 மதிப்பெண் கேள்வி ஆகியவையும் மிகவும் எளிதாக இருந்தது. ஏற்கனவே நாங்கள் 3 முறை திருப்புதல் தேர்வு எழுதி உள்ள நிலையில் ஆசிரியர்கள் எந்தெந்த பாடங்களை படிக்க வேண்டும் என்ற குறிப்பு தந்த நிலையில் எங்களுக்கு தேர்வு மிகவும் எளிதாகவே இருந்தது. தொடர்ந்து மற்ற தேர்வுகளையும் சிறப்பாக எழுதுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது
முனீஸ்வரன்
முதன் முதலாக பொதுத்தேர்வு எழுதும் அனுபவம் இது தான் என்றாலும் எவ்வித பதட்டமும் இல்லாமல் தேர்வு எழுதினேன். தமிழ் தேர்வில் அனைத்து வினாக்களும் எளிதாகவே இருந்தது. 3 மதிப்பெண்களுக்கான மனப்பாடப் பகுதியில் சற்று வித்தியாசமாக கேட்கப்பட்டிருந்தது. வழக்கமாக ஏதாவது ஒரு கேள்விக்கு மட்டும் தான் பதிலளிக்க வேண்டும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் நேற்று முழுமையாகவே பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் மூன்று மதிப்பெண்கள் என்று தான் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் முழுமையாக பதிலளித்துள்ளேன்.
சுபஸ்ரீ
தமிழ் பொதுத்தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. அரசு பொதுத்தேர்வு முதன்முதலாக எழுதுகிறோம் என்ற ஒரு உணர்வு இல்லாமல் தேர்வு எழுதினேன். தமிழ் தேர்வை போல மற்ற தேர்வுகளும் மிக எளிதாக இருந்தால் நன்றாக இருக்கும்.
ஹரிணி
எங்களுக்கு ஏற்கனவே வைக்கப்பட்டு இருந்த திருப்புதல் தேர்வில் இருந்து தான் வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன. ஆதலால் தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. அதிக மதிப்பெண்கள் வரும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்.
பொன் அனுப்பிரியா
பொதுத்தேர்வை எதிர்கொள்வது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தேர்வு வினாக்கள் மிகவும் எளிமையாக கேட்கப்பட்டு இருந்ததால் எங்களால் அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க முடிந்தது. இதனால் அதிக மதிப்பெண்கள் பெறுவது உறுதி. அனைத்து பாடங்களையும் வெற்றிக்கரமாக எழுதி 100 சதவீத மதிப்பெண்கள் பெறுவதே என்னுடைய குறிக்கோளாக உள்ளது. என்னை போல் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் அதிக மதிப்பெண் பெற இறைவனை வேண்டுகிேறன்.
ஹரிராம்ஜி
தேர்வுக்கு முன்னர் பயமாக இருந்தது. பெற்றோர் கொடுத்த ஊக்கத்தால் தேர்வு எழுதினேன். தமிழ் கேள்வி தாள் மிகவும் சுலபமாக இருந்தது. பல கேள்விகள் திருப்புதல் தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் தான். குறைந்தது 80 மதிப்பெண் பெற வாய்ப்பு உள்ளது. 8-ம் வகுப்பு, 9-ம் வகுப்புகள் படிக்கும் போது கொரோனா காலத்தில் பள்ளிக்கு சென்று தேர்வு எழுதாமல் இருந்த நிலையில் தற்போது 10-ம் வகுப்பு பொது தேர்வு எழுதியது மிகவும் மிகழ்ச்சியாக இருக்கிறது. அடுத்து வரும் தேர்வுகளும் நல்ல முறையில் மதிப்பெண் பெற முயற்சி செய்வேன்.