விமானநிலைய ஊழியர் உள்பட 2 பேரிடம் பணம் பறிப்பு
திண்டிவனம் பகுதியில் வெவ்வேறு சம்பவத்தில் விமானநிலைய ஊழியர் உள்பட 2 பேரிடம் பணத்தை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
திண்டிவனம்
விழுப்புரம் மாவட்டம் பிடாகம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் மகன் மணிகண்டன்(வயது 20). மினி லாரி டிரைவரான இவர் சென்னையில் இருந்து தனியார் நிறுவனத்துக்குசொந்தமான டிஷ் ஆன்டனா உள்ளிட்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு கடலூருக்கு வந்து கொண்டிருந்தார்.
வழியில் தூக்கக் கலக்கமாக இருந்ததால் திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் மினி லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு டிரைவர் இருக்கையிலேயே அமர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் திடீரென மணிகண்டனை தாக்கி அவரது சட்டை பையில் இருந்த ரூ.8 ஆயிரம் மற்றும் மினி லாரி சாவி ஆகியவற்றை பறித்து சென்றுவிட்டனர். இதுகுறித்து மணிகண்டன் கொடுத்த தகவலின் பேரில் திண்டிவனம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் மகன் கவுரிசங்கர்(28). சென்னை விமான நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்த இவர் கோவை விமான நிலையத்துக்கு பணிமாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து கவுரிசங்கர் பணியில் சேர்வதற்காக சென்னையில் இருந்து மோட்டார் சைக்கிளில் கோவைக்கு சென்று கொண்டிருந்தார். திண்டிவனம் அருகே வந்தபோது கவுரிசங்கர் இயற்கை உபாதை கழிப்பதற்காக மோட்டார் சைக்கிளை சாலையோரமாக நிறுத்தினார்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் அவரை மிரட்டி அவரது பணப்பையில் இருந்த ரூ.5 ஆயிரத்தை பறித்துச்சென்றனர். இதுகுறித்து ரோசணை போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். திண்டிவனத்தில் அடுத்தடுத்து விமான நிலைய ஊழியர் உள்பட 2 பேரிடம் மர்ம நபர்கள் பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.