தமிழ் தேர்வு எளிதாக இருந்தது-மாணவ-மாணவிகள் கருத்து

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கிய நிலையில் தமிழ் பாடத்தேர்வு எளிதாக இருந்ததாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

Update: 2022-05-06 19:13 GMT
கரூர்,
தேர்வு எளிதாக இருந்தது
கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் ராம்பிரசாத்:- பொதுத்தேர்வு முதன்முறையாக எழுதுவதால் சற்று பயமாக இருந்தது. 9-ம் வகுப்பு வரை இறுதி தேர்வு எழுதியதை விட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு சற்று வித்தியாசமாக உணர்ந்தேன். தமிழ் பாடத்தேர்வு வினாக்கள் எளிமையாக இருந்தது. இதனால் பயமில்லாமல் தேர்வை எழுதினேன். இதேபோன்று அனைத்து பாடத்தேர்வுகளும் சுலபமாக இருந்தால் மகிழ்ச்சி அடைவோம்.
குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பரணிபிரியா:- முதன் முதலாக பொதுத்தேர்வு எழுதுவதால் காலையில் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு தேர்வு எழுத வந்தேன். தேர்வு அறைக்குள் வந்தவுடன் சற்று பயம் கலந்த பதட்டமாக இருந்தாலும் கேள்வித்தாள் பார்த்தவுடன் பயம் தெளிந்தது. தமிழ் தேர்வு மிகவும் எளிதாக இருந்தது.
கொரோனா ஊரடங்கு
கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி காவ்யா:- தமிழ் தேர்வு எளிதாக இருந்தது. பாடங்களில் படித்ததில் பெரும்பாலும் அனைத்து கேள்விகளும் இடம்பெற்றிருந்தன. பள்ளிகள் முழுமையாக நடைபெறாவிட்டாலும் நடத்திய பாடங்களில் இருந்து தேர்வுகளில் கேள்விகள் கேட்கப்பட்டன. வரும் தேர்வுகளும் இதேபோல் எளிதாக இருக்கும் என நம்புகிறேன்.
க.பரமத்தி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சுபாஸ்ரீ:- கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி முழுமையாக திறக்கப்படாதது மிகுந்த வருத்தமளிக்கிறது. இருந்தபோதிலும் ஆசிரியர்கள் நன்றாக பாடம் நடத்தினார்கள். முதல் முறையாக பொதுத்தேர்வு எழுதியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் பாடம் மிகவும் எளிமையாக இருந்தது. இதனால் அதிக மதிப்பெண் கிைடக்கும் என்று நம்புகிறேன்.
அதிக மதிப்பெண் கிடைக்கும்
நொய்யல் ஈவேரா பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ரூபிணி:- தமிழ் தேர்வு எளிதாக இருந்தது. பாடங்களில் படித்ததில் பெரும்பாலும் அனைத்து கேள்விகளும் இடம்பெற்றிருந்தன. இதனால் 90 சதவீத மதிப்பெண் கிடைக்கும்.
தோகைமலை அரசு மேல்நிலை பள்ளி மாணவி துர்காதேவி:- கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றால் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் பொதுத்தேர்வு தொடங்கும் முன்பு தேர்வை எப்படி எழுதப்போகிறமோ? என்று எண்ணியிருந்தேன். ஆனால் தேர்வு எளிதாக இருந்தது. பொதுத்தேர்வுக்கு முன்கூட்டியே தயார்படுத்தி படிக்க தொடங்கினேன். பள்ளியிலும் நல்லமுறையில் பாடங்களை ஆசிரியர்கள் நடத்தினர். இதனால் அதிக மதிப்பெண் கிடைக்கும். 
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்