எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 12 ஆயிரத்து 212 மாணவ-மாணவிகள் எழுதினர்

கரூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 12 ஆயிரத்து 212 மாணவ-மாணவிகள் எழுதினர். 952 பேர் தேர்வு எழுதவில்லை.

Update: 2022-05-06 19:11 GMT
கரூர்,
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. கரூர் மாவட்டத்தில் 59 தேர்வு மையங்களில் தமிழ் தேர்வு நடைபெற்றது. இதையொட்டி மாணவ- மாணவிகள் காலை 8.30 மணி முதலே தேர்வு மையங்களுக்கு வந்தனர். பின்னர் தேர்வின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர் மாணவர்களுக்கு எடுத்து கூறினார்.
அதன்பின்னர் 9.45 மணியளவில் தேர்வு அறைக்கு மாணவ-மாணவிகள் சென்றனர். 10 மணியளவில் வினாத்தாள்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. 10 நிமிடங்கள் வினாக்களை வாசிக்க நேரம் ஒதுக்கப்பட்டது. 10.15 மணியளவில் மணி சத்தம் ஒலித்ததும் தேர்வினை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் எழுத தொடங்கினர். 
பறக்கும் படை
தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின் பேரில் செய்யப்பட்டிருந்தன. கரூர் மாவட்டத்தில் 135 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
க.பரமத்தி அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொது தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 2 ஆண்டுகளுக்கு பிறகு தேர்வு நடைபெறுவதால் கொரோனா வழிகாட்டு முறைகளை கடைபிடித்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
952 பேர் தேர்வு எழுதவில்லை
மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் தேவைக்கேற்ப தகுந்த உதவியாளர்கள் அமைக்கப்பட்டு அவர்கள் மூலம் தேர்வு எழுதினர். நேற்று நடைபெற்ற தேர்வில் மாவட்டம் முழுவதும் 12 ஆயிரத்து 212 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினார்கள். 952 பேர் தேர்வு எழுதவில்லை.
தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் அனைத்தும் பாதுகாப்பாக மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டன.

மேலும் செய்திகள்