வயர் திருடியவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு

வயர் திருடியவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

Update: 2022-05-06 19:03 GMT
பெரம்பலூர்
பெரம்பலூர் ரோஸ் நகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சரவணக்குமார்(வயது 35). இவர் நேற்று அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது, அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் இருந்து சத்தம் கேட்டு எழுந்து அங்கு சென்று பார்த்தார். அப்போது அந்த வீட்டில் மர்மநபர் ஒருவர் மின்சார வயர்களை திருடி கொண்டிருந்தார். இதனை கண்ட சரவணக்குமார் இதுகுறித்து அக்கம், பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்து விட்டு அந்த நபரை பிடிக்க முயன்றார். அந்த நபர் தப்பி ஓடும் போது கீழே விழுந்தார். இதையடுத்து ஓடிச்சென்று சரவணக்குமார் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் அந்த நபரை கையும், களவுமாக பிடித்தார். கீழே விழுந்ததில் காயமடைந்த அந்த நபரை பொதுமக்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகா, வீரகனூர் அருந்ததியர் தெருவை சேர்ந்த கணபதி மகன் குயில் என்ற சுந்தரம் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து சுந்தரத்தை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்