பட்டா வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்

அரசு புறம்போக்கு மற்றும் கோவில் இடங்களில் குடியிருப்பவர்களுக்கு குடிமனை பட்டா வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2022-05-06 18:36 GMT
திருவாரூர்
அரசு புறம்போக்கு மற்றும் கோவில் இடங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு நிலம் வழங்க வேண்டும். நீர்நிலை புறம்போக்கு இடங்களில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து தாசில்தார் அலுவலகத்திலும் மனு கொடுக்கும் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
 அதன்படி திருவாரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோமதி, மாவட்டக்குழு உறுப்பினர் பழனிவேல், ஒன்றிய செயலாளர் இடும்பையன், நகர செயலாளர் தர்மலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர், கட்சி நிர்வாகிகள் தாசில்தார் அலுவலகத்தில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
திருத்துறைப்பூண்டி-நீடாமங்கலம்
இதேபோல, திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு தலைமை தாங்கினார். இதில், கட்சியின் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், விவசாய சங்க மாவட்ட பொருளாளர் சாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர், தாசில்தாரிடம் மனு அளித்தனர்.
 நீடாமங்கலம் தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி தலைமை தாங்கினார். இதில், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். பின்னர், தாசில்தாரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
வலங்கைமான்
 வலங்கைமான் தாசில்தார் அலுவலகத்தின் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலியபெருமாள், முருகையன் ஆகியோர் கூட்டு தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. பின்னர் தாசில்தாரிடம் மனு அளித்தனர்.

மேலும் செய்திகள்