அனைத்துத்துறை அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்க நடவடிக்கை-யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

அனைத்துத்துறை அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிங்கம்புணரி யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

Update: 2022-05-06 18:10 GMT
சிங்கம்புணரி
அனைத்துத்துறை அதிகாரிகளும் கூட்டத்தில்  பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிங்கம்புணரி யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
யூனியன் கூட்டம்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் யூனியன் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் திவ்யா பிரபு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமண ராஜு, கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலக மேலாளர் அருள் பிரகாசம் வரவேற்றார். கூட்டத்தில் மன்ற பொருள் 14 எடுத்து வைக்கப்பட்டது. 
வரவு செலவு, பணிகள் குறித்த 14 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு 15-வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பணிகள் சுமார் ரூ.1 கோடியே 47 லட்சம் மதிப்பில் பணிகள் அங்கீகரிக்கப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
நடவடிக்கை
இந்த கூட்டத்தில் துணை தலைவர் சரண்யா ஸ்டாலின், கவுன்சிலர்கள் கலைச்செல்வி அன்புச்செழியன், ரம்யா செல்வக்குமார், உமா சோணைமுத்து, சத்தியமூர்த்தி, உதயசூரியன், பெரிய கருப்பி முத்தன், இளங்குமார், சசிக்குமார், ஒன்றிய அலுவலக பணியாளர்கள் அய்யனார் உள்பட மற்ற துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
இக்கூட்டத்தில் அடிக்கடி மின் வெட்டால் பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க மின்சாரத்துறை சார்பில் அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். மேலும் வருங்காலங்களில்  துறை சார்ந்த அனைத்து அலுவலக அதிகாரிகளும் யூனியன் கூட்டத்தில் கண்டிப்பாக கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

மேலும் செய்திகள்