காரைக்குடி
சிவகங்கை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்புராம், துணைத்தலைவர் துரை சிங்கம் ஆகியோர் தலைமையில் சென்னையில் 5 நாட்கள் நடைபெற்ற 42-வது தேசிய அளவிலான மூத்தோர் தடகளப் போட்டியில் சிவகங்கை மாவட்டமூத்தோர் தடகள வீரர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் சிங்கம்புணரி அருகே உள்ள செல்லியம்பட்டியை சேர்ந்த கோவிந்தன் 80 பிளஸ் பிரிவில் 800 மீ, 1500 மீ ஓட்டப்பந்தயங்களிலும் 4X100 மீ தொடர் ஓட்டத்திலும் முதலிடம் பெற்றார். 5000 மீ ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடமும் பெற்றார். காரைக்குடி கோட்டையூர் ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த பொசலான் 75 பிளஸ் பிரிவில் மும்முறை தாண்டுதல் போட்டியில் முதலிடம் பெற்றார். காரைக்குடி ெரயில்வே பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி 70 பிளஸ் பிரிவில் 300 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் இரண்டாமிடம் பெற்றார். வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவர்கள் 3 பேரும் ஜூலை மாதம் பிலிப்பைன்சில் நடைபெறும் ஆசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். சாதனை படைத்த வெற்றி வீரர்களை காரைக்குடி தடகள விளையாட்டு வீரர்கள் சங்கத்தினர் பாராட்டினர்.