இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு
காரைக்குடி, சாக்கோட்டை பகுதியில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இறைச்சி கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.
காரைக்குடி
காரைக்குடி, சாக்கோட்டை பகுதியில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இறைச்சி கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.
திடீர் ஆய்வு
காரைக்குடி மற்றும் அதன் அருகே உள்ள சாக்கோட்டை வட்டார பகுதியில் உள்ள சவர்மா கடைகளில் சிவகங்கை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி தலைமையில் காரைக்குடி நகர உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துக்குமார், சாக்கோட்டை உணவு பாதுகாப்பு அலுவலர் தியாகராஜன், உதவியாளர் கருப்பையா ஆகியோர் திடீர் ஆய்வு நடத்தினர்.
ஆய்வின் போது சுகாதாரமற்ற முறையில் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 2 கடையின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து மளிகை கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு அங்கு சுகாதாரமற்ற முறையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மசாலா பொருட்கள், மாவு பாக்கெட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் சுமார் 2 கிலோ வரை பறிமுதல் செய்யப்பட்டது.
எச்சரிக்கை
மேலும் அந்த பகுதியில் உள்ள கோழி மற்றும் இறைச்சி கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு கடை உரிமையாளர்களிடம் இறைச்சி விற்பனை செய்யும் போது அதற்குரிய ரசீதையும் தவறாமல் கொடுக்க வேண்டும் என்றும், உணவு பாதுகாப்பு சட்ட முறைப்படி நடக்காத கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கடைகளில் விற்பனைக்காக வைக்கப்படும் மைனோனஸ் சுமார் 5 மணி முதல் 6 மணி மேல் பயன்படுத்தக்கூடாது எனவும் எச்சரிக்கை விடப்பட்டது.
காளையார்கோவில்
மேலும் சிவகங்கை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பிரபாவதி உத்தரவின் பேரில் காளையார்கோவில் மற்றும் இளையான்குடி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேஷ்குமார் காளையார்கோவிலில் சவர்மா விற்பனை செய்யும் கடைகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது சுகாதாரமான முறையில் சவர்மா தயாரிக்க வேண்டும், இறைச்சி வாங்கியதற்கான ரசீது வைத்திருக்க வேண்டும், செயற்கை நிறம் சேர்க்க கூடாது, உணவு சமைக்கும் இடம் சுகாதாரமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.