நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது

காரைக்குடியில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதனால் காரில் வந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2022-05-06 18:08 GMT
காரைக்குடி
காரைக்குடியில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதனால் காரில் வந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கார் தீப்பிடித்தது
காரைக்குடி என்.ஜி.ஒ. காலனி பகுதியைச் சேர்ந்தவர் குப்புச்சாமி. இவர் தனது குடும்பத்துடன் நேற்று மதியம் காரைக்குடி நகர் பகுதியில் உள்ள கடைகளுக்கு பொருட்கள் வாங்குவதற்காக தனது காரில் வந்துள்ளார். அதன் பின்னர் பொருட்களை வாங்கி விட்டு நகராட்சி அலுவலகம் எதிரே தேவர் சிலை பகுதியில் அவரது கார் வந்தபோது காரின் முன் பகுதியில் உள்ள என்ஜினில் இருந்து புகை கிளம்பியது. 
இதைக்கண்டதும் குப்புச்சாமி தனது காரை நிறுத்தி குடும்பத்துடன் கீழே இறங்கினார். அதன் பின்னர் திடீரென அந்த கார் மள மளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதையடுத்து அங்கு ஏராளமானோர் கூடினர். 
பரபரப்பு
மேலும் அந்த வழியாக வந்த காரைக்குடி நகர் மன்ற தலைவர் முத்துத்துரை, இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் காரைக்குடி தீயணைப்புத்துறை அதிகாரிகள் அங்கு வந்து தீப்பிடித்து எரிந்துக்கொண்டிருந்த காரை தண்ணீர் பீய்ச்சியடித்து அணைத்தனர். அதற்குள் கார் முற்றிலும் எரிந்து எலும்பு கூடாக மாறியது. 
ஏற்கனவே தற்போது அக்னி வெயில் வாட்டி வைத்து வரும் நிலையில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால் நேற்று பரபரப்பாக காணப்பட்டது. மேலும் அதிக வெயில் தாக்கம் காரணமாக என்ஜின் தீப்பிடித்து எரிந்ததா அல்லது என்ஜின் கோளாறு காரணமாக தீப்பிடித்து எரிந்ததா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்