வரவு-செலவு கணக்கு விவரம் கேட்டு தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம்

ஆண்டிப்பட்டி ஒன்றியக்குழு கூட்டத்தில் வரவு-செலவு கணக்கு விவரம் கேட்டு தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-06 17:57 GMT
ஆண்டிப்பட்டி: 

ஆண்டிப்பட்டி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் லோகிராஜன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் வரதராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மலர்விழி, ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. 

அப்போது தி.மு.க.வை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர்கள் எழுந்து தீர்மானம் வாசிப்பதை நிறுத்தக் கூறினர். பின்னர் தங்களுக்கு நடப்பு ஆண்டு வரை ஒன்றிய பொது நிதியில் மேற்கொள்ளப்பட்ட வரவு-செலவுகளை தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். தீர்மானங்கள் வாசித்து முடித்த பின்பு வரவு, செலவு குறித்து தெரிவிக்கப்படும் என்று தலைவர் கூறினார். இதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. 

இந்நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 2019-ம் ஆண்டு வரையிலான வரவு-செலவுகளை தி.மு.க. கவுன்சிலர்களிடம் வழங்கினர்.  ஆனால் நடப்பு ஆண்டு வரை வரவு-செலவு கணக்குகளை தெரிவிக்க வேண்டும் என்று தி.மு.க கவுன்சிலர்கள், தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 


இதையடுத்து ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறி தலைவர் அறைக்கு சென்றனர். தலைவரின் நடவடிக்கைக்கு தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்