போலீஸ் ஏட்டுவை வெட்டிக் கொல்ல முயற்சி

பண்ருட்டி அருகே இரவில் ரோந்து சென்ற போலீஸ் ஏட்டுவை வெட்டிக் கொல்ல முயன்ற ரவுடியை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

Update: 2022-05-06 17:57 GMT
பண்ருட்டி, 

பண்ருட்டி அருகே உள்ள காட்டுகூடலூரை சேர்ந்தவர் தண்டபாணி(வயது 45). இவர் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். 
இவர் நேற்று இரவு 10.45 மணி அளவில் நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்றார். அப்போது அந்த வழியாக காரில் வந்த ஒரு குடும்பத்தினர், சாலையில் மோட்டார் சைக்கிளுடன் 2 பேர் நின்றுகொண்டு கத்தியை காட்டி மிரட்டுவதாக போலீஸ் ஏட்டு தண்டபாணியிடம் கூறினர். 

போலீஸ் ஏட்டுவுக்கு வெட்டு 

இதையடுத்து தண்டபாணி, தனது மோட்டார் சைக்கிளில் பண்ருட்டி அருகே கீழக்கொல்லைக்கு சென்றார். அங்கு கையில் கத்தி மற்றும் இரும்பு கம்பியுடன் நின்று கொண்டிருந்த 2 பேரிடமும் தண்டபாணி விசாரணை நடத்தினார். அப்போது அந்த 2 பேரும் அவரை ஆபாசமாக திட்டினர். மேலும் ஆத்திரமடைந்த ஒருவர், தான் வைத்திருந்த கத்தியால் ஏட்டு தண்டபாணியை வெட்டினார். மற்றொருவர் இரும்பு கம்பியால் தாக்கினார். அவரது மோட்டார் சைக்கிளையும் அடித்து நொறுக்கினர். 
இதில் காயமடைந்த ஏட்டு தண்டபாணி கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஓடிவந்தனர். இதை பார்த்ததும் 2 பேரும் தப்பிச் செல்ல முயன்றனர். இதில் ஒருவர், மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டார். தப்பி ஓடிய மற்றொருவரை பொதுமக்கள் விரட்டிச்சென்று பிடித்து காடாம்புலியூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

ரவுடி கைது 

காயமடைந்த ஏட்டு தண்டபாணி சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். 
போலீசார் நடத்திய விசாரணையில், ஏட்டு தண்டபாணியை கத்தியால் வெட்டியவர் நெய்வேலி அருகே உள்ள வடக்குத்தை சேர்ந்த நடேசன் மகன் ரவுடி வீரமணி(24) என்பதும், இரும்பு கம்பியால் தாக்கி விட்டு தப்பி ஓடியவர் நெய்வேலி 3-வது வட்டத்தை சேர்ந்த அரவிந்தன் என்பதும் தெரியவந்தது. 
இது தொடர்பாக காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி வீரமணியை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய அரவிந்தனை வலைவீசி தேடி வருகின்றனர். 
ரோந்து சென்ற போலீஸ் ஏட்டுவை ரவுடி வெட்டிக் கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்