விக்கிரவாண்டி அருகே பயங்கரம் பெண்களை கேலி செய்ததை கண்டித்த வாலிபர் கொலை தொழிலாளி கைது
விக்கிரவாண்டி அருகே பெண்களை கேலி செய்ததை கண்டித்த வாலிபரை அடித்துக் கொலை செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்
விக்கிரவாண்டி
தொழிலாளி
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வீடூர் புதுப்பேட்டை தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் மகன் கேசவன்(வயது 30). அந்த பகுதியில் உள்ள மினி டேங்கில் துணி துவைத்துக்கொண்டிருந்த பெண்களை அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் தொழிலாளி அலெக்சாண்டர்(25) கேலி செய்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கேசவன், அலேக்சாண்டரை கண்டித்தார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது கைகலப்பாக மாறியது. உடனடியாக அங்கிருந்தவர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தி, வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
கல்லால் அடித்துக் கொலை
இந்த நிலையில் கேசவன் வீட்டிற்கு சென்ற அலெக்சாண்டர், அவரை திடீரென கருங்கல்லால் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த கேசவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த கேசவனின் உறவினர்கள், சென்னை- திருச்சி் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், அலெக்சாண்டரை உடனடியாக கைது செய்யக்கோரி கோஷமிட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுபற்றி தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், ஏற்கனவே கேசவன் மனைவி வித்யாஸ்ரீ(28) கொடுத்த புகாரின் பேரில் அலெக்சாண்டரை கைது செய்துள்ளோம் என்றனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் சென்னை-திருச்சி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.