10 ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது விழுப்புரம் மாவட்டத்தில் 24 652 மாணவ மாணவிகள் எழுதினார்கள்
விழுப்புரம் மாவட்டத்தில் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வை 24652 மாணவ மாணவிகள் எழுதினார்கள்
விழுப்புரம்
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு
தமிழகம் முழுவதும் நேற்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை 361 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 120 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது.
இத்தேர்வை எழுத 12 ஆயிரத்து 974 மாணவர்களும், 12 ஆயிரத்து 603 மாணவிகளும் என மொத்தம் 25 ஆயிரத்து 577 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்தனர். தேர்வு எழுத வரும் மாணவ- மாணவிகள் அனைவரும் காலை 9.45 மணிக்குள் தேர்வு கூடங்களுக்குள் இருக்க வேண்டும் என்பதால் அதற்கு முன்னதாகவே காலை 9 மணிக்கெல்லாம் மாணவ- மாணவிகள் தேர்வு மையத்துக்குள் வந்தனர். தேர்வை எவ்வித பதற்றமும் இல்லாமல், மகிழ்ச்சியுடன் எழுத வேண்டும் என்று மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ஆலோசனை வழங்கினர்.
24,652 பேர் தேர்வு எழுதினர்
சரியாக காலை 10 மணிக்கு மாணவ- மாணவிகளுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது. வினாத்தாளில் என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து படித்து பார்ப்பதற்காக கூடுதலாக 10 நிமிடம் ஒதுக்கப்பட்டது. பின்னர் 10.10 மணிக்கு விடைத்தாள்கள் வழங்கப்பட்டவுடன் அதில் மாணவ- மாணவிகள் தங்களது பெயர், பள்ளியின் பெயர் உள்ளிட்ட விவரங்களை எழுத 5 நிமிடம் ஒதுக்கப்பட்டு 10.15 மணிக்கு தேர்வு தொடங்கியது.
தேர்வு எழுத வரும் மாணவ- மாணவிகள் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை என்பதால் சாதாரணமாக அமர்ந்து தேர்வு எழுதினர். ஒரு சில மாணவ- மாணவிகள் மட்டும் முகக்கவசம் அணிந்தபடி வந்து தேர்வு எழுதியதையும் காண முடிந்தது. காலை 10.15 மணியில் இருந்து பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை 24,652 மாணவ- மாணவிகள் எழுதினர். 925 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதுதவிர தனித்தேர்வர்கள் 689 பேர் விண்ணப்பித்ததில் 626 பேர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர். 63 பேர் தேர்வு எழுத வரவில்லை.
பறக்கும் படை கண்காணிப்பு
தேர்வில் மாணவர்கள் ஆள் மாறாட்டம், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், காப்பியடித்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடாமல் இருக்க கண்காணிக்கும் பணியில் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், முதுகலை, பட்டதாரி ஆசிரியர்கள் என 4,491 பேரும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் அடங்கிய 432 பறக்கும் படை குழுவினரும் ஈடுபட்டனர்.
பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் தடையில்லா மின்சாரம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.