ஷோரூமில் பயங்கர தீ 42 வாகனங்கள் எரிந்து சேதம்

வேப்பூர் ஷோரூமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 42 வாகனங்கள் எரிந்து சேதமானது.

Update: 2022-05-06 17:45 GMT
வேப்பூர், 

விருத்தாசலம் ராமதாஸ் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). இவர் வேப்பூர் கூட்டுரோட்டில் இருசக்கர வாகன ஷோரூம் நடத்தி வருகிறார். நேற்று  இரவு செந்தில்குமார் வழக்கம்போல் ஷோரூமை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். 
இந்த நிலையில் இன்று காலை 8 மணியளவில் ஷோரூமில் வாகனங்கள் பழுது நீக்கும் கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்து திடீரென்று கரும்புகை வெளியேறியது. 
சிறிது நேரத்தில் ஷோரூம் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். 

எலும்பு கூடான வாகனங்கள் 

இதையடுத்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலா்கள் வேப்பூர் மனோகரன், விருத்தாசலம் மணி ஆகியோர் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். மேலும் ஷோரூமின் கதவை உடைத்து உள்ளே சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். 
இந்த பயங்கர தீ விபத்தில் ஷோரூமிற்குள் இருந்த 31 புதிய இருசக்கர வாகனங்கள், பழுது நீக்கம் செய்ய வந்த 11 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து எலும்பு கூடுபோல் காட்சி அளித்தது. மேலும் 13 புதிய இருசக்கர வாகனங்கள் குறைந்தளவு சேதத்துடன் மீட்கப்பட்டன. 

ரூ.50 லட்சம் சேதம் 

ஷோரூமில் இருந்த இருசக்கர வாகன உதிரி பாகங்களும் தீயில் கருகின. இதன் மொத்த சேதமதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. 
தீ விபத்துக்கான காரணம் குறித்து வேப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருசக்கர வாகன ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் வேப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்