நாளை நடக்கிறது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.;
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் 28 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் பேராயுதம் தடுப்பூசி மட்டுமே. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 10 லட்சத்து 80 ஆயிரத்து 640 பேருக்கு முதல் தவணையும், 11 லட்சத்து ஆயிரத்து 913 பேருக்கு இரண்டாம் தவணையும், 8 ஆயிரத்து 126 பேருக்கு முன்னெச்சரிக்கை தவணையும், 15 முதல் 18 வயது வரை உள்ள 1 லட்சத்து 20 ஆயிரத்து 265 பேருக்கும், 12 முதல் 14 வயது வரை உள்ள 97 ஆயிரத்து 689 பேர் என மொத்தம் 23 லட்சத்து 78 ஆயிரத்து 633 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் முதல் தவணையும், முதல் தவணை செலுத்திக் கொண்டவர்கள் 2-ம் தவணையும், 15 முதல் 18 வயதுடையவர்கள் (கோவாக்சின்) தடுப்பூசியும், 12 முதல் 14 வயதுடைய பள்ளிக் குழந்தைகளுக்கு (கோர்பிவேக்ஸ்) தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளவேண்டும்.
இவ்வாறு மேற்கண்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.