வீட்டுமனைப்பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தர்ணா போராட்டம் கள்ளக்குறிச்சியில் பரபரப்பு
வீட்டுமனைப்பட்டா கேட்டு கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி,
வீட்டுமனைப்பட்டா
கள்ளக்குறிச்சி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பல ஆண்டுகளாக நீர்நிலை புறம்போக்கில் குடியிருந்து வருபவர்களுக்கு வகை மாற்றம் செய்து வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின்மணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆனந்தன், ஏழுமலை, சுப்பிரமணி, பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தர்ணா போராட்டம்
போராட்டத்தில் கலந்து கொண்ட 500-க்கும் மேற்பட்டவர்கள் வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரியும், அது தொடர்பான மனுவை பெற மாவட்ட கலெக்டர் நேரில் வரவேண்டும் என கோஷம் எழுப்பியபடியும் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரி சிவசங்கரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.