2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை திருட்டு
2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை திருட்டு;
போடிப்பட்டி:
உடுமலையில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 26½ பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
துணை பேராசிரியர் வீடு
உடுமலையைஅடுத்த சின்மயாநாடார் நகர் பகுதியைச்சேர்ந்தவர் கல்யாண்சுந்தர் (வயது 62).பொள்ளாச்சியிலுள்ள தனியார் கல்லூரியில் துணை பேராசிரியராகப்பணி புரிந்து ஓய்வுபெற்றவர்.அவருடைய மனைவி உடுமலையிலுள்ள பள்ளியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவரும் திருமணமாகி கோவையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று தம்பதி இருவரும் மகள்களைப் பார்ப்பதற்காக கோவை சென்று விட்டு நள்ளிரவு 1 மணியளவில் வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது வீட்டின் கதவிலுள்ள பூட்டு மற்றும் தாழ்ப்பாள்கள் உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு 19 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது.
மற்றொரு வீட்டில் திருட்டு
அதேேபால் மாரியப்ப கவுண்டர் லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் சவுந்திரராஜன் (52).இவர் உடுமலை பஸ் நிலையம் அருகில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். அவர் சம்பவத்தன்று உறவினர் வீட்டில் நடந்த விழாவுக்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டார். மறுநாள் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 2 பீரோக்களை உடைத்து அதில் இருந்த 7½ பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த 2 சம்பவங்கள் குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன் நேரு வீதியில் கைவரிசை காட்டிய ஒடிசாவைச் சேர்ந்த கொள்ளையன் பிடிபட்ட நிலையில் 2 வீடுகளில் 26½ பவுன் திருடப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.