தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கள்ளக்குறிச்சி மாவட்டம் மகத்தான வளர்ச்சி பெற்று வருகிறது வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. பேட்டி
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கள்ளக்குறிச்சி மாவட்டம் மகத்தான வளர்ச்சி பெற்று வருவதாக வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கூறினார்.
திருக்கோவிலூர்,
பேட்டி
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் திருக்கோவிலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆகும். இந்த மாவட்டம் பிரிக்கப்பட்டதே தவிர அதற்கான வளர்ச்சித்திட்ட பணிகளே நடைபெறாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த ஆண்டு தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தமிழகம் வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்ல ஆரம்பித்தது.
தி.மு.க.வின் கோட்டை
குறிப்பாக தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மு.க.ஸ்டாலின் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் வழிகாட்டுதலுடன் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களிலேயே அதிக வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் அனைத்து துறைகளிலும் மகத்தான வளர்ச்சி பெற்று வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் என்றுமே தி.மு.க.வின் கோட்டையாக திகழ்வதால், நாம் கேட்கும் திட்டங்கள் அனைத்தும் கிடைக்கின்றது. மாவட்டத்தில் உள்ள தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் சங்கராபுரம் உதயசூரியன், உளுந்தூர்பேட்டை மணிக்கண்ணன் ஆகியோரும் தங்கள் தொகுதிகளுக்கு தேவைப்படும் வளர்ச்சி பணிகளை உடனுக்குடன் அரசிடம் அனுமதி பெற்று செயல்படுத்தி வருகின்றனர்.
குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு
மாவட்டம் முழுவதும் குடிநீர் பிரச்சினையை போக்க சுமார் 200-க்கும் மேற்பட்ட திறந்தவெளிக் கிணறுகள் அமைத்து குடிநீர் பிரச்சினையை தீர்த்து உள்ளோம். மூங்கில்துறைப்பட்டு மற்றும் கச்சிராயப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளிலும் கூட்டு மின்சாரம் தயாரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 சர்க்கரை ஆலைகளும் லாபத்தில் இயங்க தொடங்கும். இதுதவிர மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நன்றி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப்பணிகளை கணக்கில் கொண்டால் ஒரு அரசாங்கம் 5 ஆண்டுகளில் ஒரு மாவட்டத்திற்கு செய்யவேண்டிய வளர்ச்சிப் பணிகள் மற்றும் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு ஆகியவற்றை நமது மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ஒரே ஆண்டில் ஒதுக்கி மு. க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனைவிட ஒரு ஆண்டு சாதனைக்கு வேறு என்ன உதாரணம் சொல்ல முடியும். கடந்த ஆட்சி காலத்தில் இல்லாத வகையில் அனைத்து பகுதிகளுக்கும் புதிய சாலைகள், ஊராட்சிகளில் தெரு விளக்கு, குடிநீர் மற்றும் கழிவுநீர் பிரச்சினையை போக்க 100 சதவீதம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டு வரும் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் செயல்பட்டு வரும் அனைத்து நிலை அதிகாரிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.