விவசாயிகள் 2வது நாளாக மறியல்

விவசாயிகள் 2வது நாளாக மறியல்;

Update: 2022-05-06 17:04 GMT
உடுமலை, 
உடுமலையில் பி.ஏ.பி.கால்வாய்க்கு அருகில் 50 அடி தூரத்திற்குள் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு இருக்கும் நிலையில் அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை கண்டித்து விவசாயிகள் நேற்று  2-வது நாளாக சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
பி.ஏ.பி.கால்வாய்
பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்டத்தில் கால்வாயில் இருந்து ஒருசிலர் சட்டத்திற்கு புறம்பாக தண்ணீர் எடுப்பதாகவும், அதனால் கடைமடைக்கு சென்று சேர வேண்டிய தண்ணீர் முழு அளவிற்கு சென்றுசேராமல் பாசனத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரின் அளவு குறைவதாகவும் புகார் கூறப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து கால்வாய் பகுதியில் இருந்து 50 மீட்டர் தூரத்திற்குள் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு இருக்கும் பட்சத்தில், அந்த பகுதிக்கு மின் இணைப்பு பெற்றிருந்தால் அந்த மின் இணைப்பைத்துண்டிக்கும்படி உத்திரவிடப்பட்டுள்ளது.
 அதன்படி வருவாய்த்துறை, பி.ஏ.பி. பொதுப்பணித்துறை, மின் வாரியம் ஆகியவை இணைந்து போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம்  பி.ஏ.பி. உடுமலை கால்வாய் பகுதிகளுக்கு சென்றனர். அப்போது கால்வாயில் இருந்து 50 மீட்டர் தூரத்திற்குள் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு உள்ள இடங்களில் இருந்த மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. நேற்று முன்தினம் மொத்தம் 27 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
இந்த நிலையில் விவசாயிகளது மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையைக்கண்டித்து நேற்றுமுன்தினம் உடுமலையை அடுத்துள்ள போடிப்பட்டி அண்ணாநகர் பகுதியில் விவசாயிகள் தளிசாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையைத்தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.
2-வது நாளாக மறியல்
இந்தநிலையில் நேற்று விவசாயிகள் ஒன்று திரண்டு சர்தார் வீதியில் உள்ளபி.ஏ.பி.பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் கச்சேரி வீதியில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு நடந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து விவசாயிகள் நேற்று மதியம், உடுமலையை அடுத்துள்ள போடிப்பட்டி அண்ணாநகருக்கு சென்றனர். அங்கு தளி சாலையில் உட்கார்ந்து சாலைமறியல் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். உடுமலை நகரில் இருந்து இந்த சாலை வழியாக திருமூர்த்தி மலை, அமராவதி நகர் உள்ளிட்ட தெற்குபகுதிகளுக்கு செல்லும் பஸ், கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் தளிசாலையில், எலையமுத்தூர் பிரிவு வழியாக திருப்பி விடப்பட்டன.
மீண்டும் மின் இணைப்பு
சாலைமறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள், பல்வேறு காரணங்களைக்கூறி  துண்டிக்கப்பட்ட  மின் இணைப்பை மீண்டும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 
நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப்பிறகு, நேற்று முன்தினம் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளில், தற்போது மீண்டும் மின் இணைப்புகொடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, துண்டிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் மின் இணைப்பு கொடுப்பதற்காக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மின்வாரிய பணியாளர்கள் அந்தந்த இடங்களுக்கு சென்றனர். ஒவ்வொரு இடமாக சென்று மீண்டும் மின் இணைப்பு கொடுக்கும் பணிகளைத்தொடங்கினர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலைமறியல் போராட்டத்தால் அந்த வழித்தடத்தில் சுமார் 1½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்