தங்கும் விடுதி உரிமையாளரின் காரை திருடிய கேரள வாலிபர் கைது

தங்கும் விடுதி உரிமையாளரின் காரை திருடிய கேரள வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-06 16:53 GMT
கொடைக்கானல்:
கொடைக்கானலில் உள்ள நாயுடுபுரம் பச்சைமரத்து ஓடை பகுதியை சேர்ந்தவர் ஜின்னா. இவர் தங்கும் விடுதி நடத்தி வருகிறார். இவரது ஓட்டலில் கடந்த மாதம் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பினுகிருஷ்ணன் என்ற ஆதிநாராயணன் (வயது 29) வேலைக்கு சேர்ந்தார்.
இந்நிலையில் ஜின்னாவுக்கு சொந்தமான ரூ.9 லட்சம் மதிப்புள்ள காரை காணவில்லை. மேலும் ஒட்டலில் பணிபுரிந்த ஆதிநாராயணனையும் காணவில்லை. இதுகுறித்து கொடைக்கானல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் ஏட்டுகள் சரவணன், காசிநாத், ராமராஜன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் பல்வேறு இடங்களில் காரை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று  இரவு வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரை ஓட்டி வந்தது ஆதிநாராயணன் என்பதும், கார் ஜின்னாவுக்கு உரியது என்றும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஆதிநாராயணனை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் நெல்லையில் ஒருவரிடம் ரூ.6 லட்சம் மதிப்புள்ள கேமராவை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அந்த கேமராவை பறிமுதல் செய்தனர். இவருக்கு வேறு ஏதேனும் திருட்டு வழக்குகளில் தொடர்பு உள்ளதா? என போலீசார் துருவித்துருவி விசாரித்து வருகிறார்கள். 

மேலும் செய்திகள்