வேலூர் கோட்டை பூங்காவில் வாலிபர் அடித்துக்கொலை
வேலூர் கோட்டை பூங்காவில் வாலிபரை அடித்துக்கொலை செய்து, கோட்டை அகழியில் உடலை வீசிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வேலூர்
வேலூர் கோட்டை பூங்காவில் வாலிபரை அடித்துக்கொலை செய்து, கோட்டை அகழியில் உடலை வீசிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வாலிபர் பிணம்
வேலூர் கோட்டை பெரியார் பூங்கா அருகே உள்ள அகழியில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். அவர்கள் இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.
இதையடுத்து வேலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வந்து பிணத்தை மீட்டனர். பிணமாக கிடந்தவருக்கு சுமார் 30 வயது இருக்கும். அவருடைய தலையில் காயங்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து உடலை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்த தடயங்களையும் சேகரித்தனர்.
விசாரணையில் இறந்தவர் ஆர்.என்.பாளையத்தை சேர்ந்த சுபேர் (வயது 26) என்பதும், பேக்கரி கடையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
கொலை
சுபேரை பெரியார் பூங்காவில் வைத்து மர்ம நபர்கள் தாக்கி உள்ளனர். இதையடுத்து அவரை சிறிது தூரம் இழுத்து சென்றுள்ளனர். இழுத்து சென்றதற்கான அடையாளங்கள் உள்ளது.
மேலும் அகழி கரைப்பகுதியில் அவரின் நெற்றில் கல்லால் தாக்கி கொலை செய்து உள்ளனர். சம்பவ இடத்தில் தரையில் ஆங்காங்கே ரத்த கறைகள் காணப்படுகிறது. அவரை தாக்கிய கல்லிலும் ரத்தக்கறை உள்ளது. அவரை கொலை செய்து 3 நாட்கள் ஆகி இருக்கும் என்று கருதுகிறோம். உடல் அழுகிய நிலையில் இருந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ளோம். எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்?, அவரை கொலை செய்தவர்கள் யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
வேலூர் கோட்டை அகழியில் வாலிபரை கொலை செய்து வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.