15,254 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர்

தேனி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி, பொதுத்தேர்வை 15,254 மாணவ, மாணவிகள் எழுதினர்.

Update: 2022-05-06 16:49 GMT
தேனி:

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு தொடங்கியது. தேனி மாவட்டத்தில் 203 பள்ளிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 611 மாணவர்கள், 7 ஆயிரத்து 692 மாணவிகள் என மொத்தம் 16 ஆயிரத்து 303 பேர் தேர்வு எழுத அனுமதி பெற்றிருந்தனர். இவர்களுக்காக மாவட்டத்தில் மொத்தம் 66 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. கல்வி மாவட்டம் வாரியாக தேனியில் 22 மையங்கள், பெரியகுளத்தில் 17 மையங்கள், உத்தமபாளையத்தில் 27 மையங்கள் அமைக்கப்பட்டன.

உப்புக்கோட்டையில் பச்சையப்பா உயர்நிலை பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி பூக்கள் கொடுத்து ஊக்குவித்தார்.

காலை 10 மணியளவில் தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்காக காலை 7.30 மணியில் இருந்தே தேர்வு மையங்களுக்கு மாணவ, மாணவிகள் வரத் தொடங்கி விட்டனர். தேர்வு மைய வளாகத்தில் அமர்ந்து கடைசிநேரத்தில் மும்முரமாக மாணவ, மாணவிகள் படித்தனர். பின்னர் தேர்வு தொடங்கி அமைதியாக நடந்தது. மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் தேர்வு எழுதினர்.
மாவட்டத்தில் இந்த தேர்வை 7 ஆயிரத்து 935 மாணவர்கள், 7 ஆயிரத்து 319 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 254 பேர் எழுதினர். தேர்வு எழுத அனுமதி பெற்றவர்களில் 1,049 பேர் தேர்வு எழுத வரவில்லை.
தேர்வு மையங்களில் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் தேர்வில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்கவும், கண்காணிக்கவும் ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. பறக்கும் படையினரும் தேர்வு மையங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்வுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்ட நேரம், அடிப்படை வசதிகள் உள்ளதா? என்பது குறித்து தேர்வு மைய கண்காணிப்பாளர்களிடம், அவர் கேட்டறிந்தார்.

மேலும் செய்திகள்