வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மனு கொடுக்கும் போராட்டம்
வேலூர், குடியாத்தத்தில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
வேலூர்
வேலூர், குடியாத்தத்தில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
மனு கொடுக்கும் போராட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு நிர்வாகிகள் செல்வி, பாண்டுரங்கன், சுடரொளியன் ஆகியோர் தலைமை தாங்கினர். சங்கரி, நாராயணன் உள்ளிட்டோர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.
அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும், ஏழை எளிய மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் தொகையினை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு இந்து சமய அறநிலையத் சட்டத்தின்படி பட்டா வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து அவர்கள் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனுக்களை அளித்தனர்.
குடியாத்தம்
குடியாத்தம் நகர, தாலுகா மற்றும் பேரணாம்பட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் குழுக்கள் சார்பில் குடியாத்தம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக குடியாத்தம் கொண்டசமுத்திரம் காந்தி நகரில் இருந்து ஊர்வலமாக சென்றனர்.
இந்த போராட்டத்திற்கு குடியாத்தம் நகர செயலாளர் காத்தவராயன், தாலுகா செயலாளர் சிலம்பரசன், குடியாத்தம் தெற்கு செயலாளர் சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மாவட்ட செயலாளர் எஸ்.தயாநிதி, மாவட்ட செயற்குழு எம்.பி.இராமச்சந்திரன், கே.சாமிநாதன், மாவட்ட குழு பி. குணசேகரன், வி.குபேந்திரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
பல ஆண்டு காலமாக தண்ணீர் தேங்காத, இனியும் தண்ணீர் தேங்க வாய்ப்பில்லாத நீர்நிலை புறம்போக்கில் வசிக்கின்ற மக்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்கிட வேண்டும். கோர்ட்டு உத்தரவை காரணம் காட்டி வீடுகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும், மாற்று இடம் கொடுக்கும் வரை வீடுகளை அப்புறப்படுத்தக் கூடாது, கோவில் இடங்களில் வசிக்கும் மக்களுக்கு இடத்திற்கான தொகையை நிர்ணயித்து கிரையம் செய்து பட்டா வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சரவணனிடம் மனு அளிக்கப்பட்டது.