கல்லூரி பேராசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி தர்மபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடந்தது.
தர்மபுரி:-
அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி தர்மபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடந்தது.
சிறப்பு பயிற்சி
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் சார்பில் தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மண்டலத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் தர்மபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடந்தது.
பயிற்சி முகாமை கல்லூரி முதல்வர் கிள்ளி வளவன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பேராசிரியர் பாக்கிய மணி, பயிற்சி குறித்து விளக்கி பேசினார். முகாமில் இயற்பியல், வேதியியல், கணிதவியல், புள்ளியியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறைகளை சேர்ந்த பேராசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
திறன்மேம்பாடு
உயர் கல்வி தரம் மேம்பாடு, நவீன தொழில்நுட்ப வசதிகளை கற்பித்தலுக்கு பயன்படுத்துதல் குறித்து இந்த முகாமில் விளக்கப்பட்டது. கல்லூரிகளுக்கான தேசிய அங்கீகாரம் பெறும் முறைகள், கற்பித்தலுக்கான மென்பொருட்களை மேம்படுத்துதல், துறை சார்ந்த ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல், எதிர்காலத்தில் பணி திறன்களை மேம்படுத்தி கொள்ளுதல் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. துறை சார்ந்த சிறப்பு நிபுணர்கள் பயிற்சி முகாமை முன்னின்று நடத்தினர்.
பயிற்சி முகாமில் 27 கல்லூரிகளைச் சேர்ந்த 95 பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். உயர் கல்வித்துறையில் ஏற்படுகின்ற மாற்றங்கள் குறித்தும் அதற்கு ஏற்ப புதிய தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்துவது குறித்தும் விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது. பேராசிரியர்களின் கற்பிக்கும் திறன் இதன் மூலம் அதிகரிக்கும் என்று இந்த பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டது.