கோவை அருகே திடீரென்று மழை பெய்த போது மின்னல் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்

கோவை அருகே திடீரென்று மழை பெய்த போது மின்னல் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்

Update: 2022-05-06 16:39 GMT

துடியலூர்

கோவை அருகே திடீரென்று மழை பெய்த போது மின்னல் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

திடீர் மழை

கோவை மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ள தால் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாடுவது குறைந்து உள்ளது. 

இதற்கிடையே கோவை துடியலூர், பன்னிமடை, வரப்பாளை யம், தடாகம் நஞ்சுண்டாபுரம் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை திடீரென்று இடி, மின்னலுடன் மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.

மின்னல் தாக்கியது

இந்த நிலையில் சோமயனூர் ஓம்சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவருடைய மகன் ரங்கராஜ் (வயது 56). கூலி தொழிலாளி. 

இவர் தனது வீட்டுக்கு பின்புறம் நின்று கொண்டு இருந்த போது மழை பெய்து கொண்டு இருந்தது. 

அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக திடீரென்று ரங்கராஜை மின்னல் தாக்கியது. இதில் அவருடைய வயிறு உள்ளிட்ட உடல் உறுப்புகள் கருகின. இதனால் அவர் கீழே சரிந்தார்.

தொழிலாளி சாவு

இதை பார்த்து அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டனர். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரங்கராஜின் மனைவி விஜயா மற்றும்  மகன்கள் சரவணகுமார், பிரவின் குமார் ஆகியோர் விரைந்து வந்தனர். 

அவர்கள், ரங்கராஜை உடனடியாக மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர், வரும் வழியிலேயே ரங்கராஜ் இறந்து விட்டதாக கூறினார். அதை கேட்டு குடும்பத்தினர் கதறி அழுதனர்.

விசாரணை

இது குறித்து தடாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுக நாயனார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மின்னல் தாக்கி தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்