பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்

புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் தர்மபுரி உள்பட 4 இடங்களில் நடந்தது.

Update: 2022-05-06 16:39 GMT
தர்மபுரி:-
புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் தர்மபுரி உள்பட 4 இடங்களில் நடந்தது.
மனு கொடுக்கும் போராட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு வகையான புறம்போக்கு நிலங்களில் ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் பல ஆண்டுகளாக கோவில் நிலங்களில் வீடு கட்டி குடியிருந்து வருகிறார்கள். இத்தகையவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, முத்து, கிரைஸாமேரி, தர்மபுரி நகர செயலாளர் ஜோதிபாசு உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தின் முடிவில் புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு மனை பட்டா கேட்டு 750 கோரிக்கை மனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் அளித்தனர்.
பாலக்கோடு- அரூர்
அரூரில் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மனுகொடுக்கும் போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழுஉறுப்பினர் மல்லிகா உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்கள். போராட்டத்தின் முடிவில் உதவி கலெக்டர் அலுவலகத்தில் மனை பட்டா கோரி 300 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.
இதேபோல் பாலக்கோட்டில் நடைபெற்ற போராட்டத்திற்கு வட்டசெயலாளர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்டசெயற்குழு உறுப்பினர் நாகராசன், மாவட்டக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். போராட்டத்தின் முடிவில் மனைப்பட்டா கேட்டு 500 மனுக்கள் தாலுகா அலுவலகத்தில் வழங்கப்பட்டன.
பென்னாகரம்
பென்னாகரம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஊர்வலமாக தாலுகா அலுவலகம் சென்றனர். அங்கு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிசுபாலன், பகுதி செயலாளர்கள் சக்திவேல், முருகன், ரவி, சின்னசாமி, எழிலரசு, மாவட்ட குழு உறுப்பினர் ஜீவானந்தம், அன்பு, குமார் உள்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தொடர்ந்து வீட்டு மனைப்பட்டா கேட்டு 300-க்கும் மேற்பட்டவர்கள் மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்