வேப்பனப்பள்ளி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

வேப்பனப்பள்ளி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-06 16:39 GMT
வேப்பனப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள சிகரமாகனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த மஞ்சம்மாவின் மகள் பிரமிளா (33). இவருக்கும், கர்நாடக மாநிலம் கேம்மனஅள்ளி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி மஞ்சுநாத் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 
இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு பிரமிளா தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். ஓராண்டாக மனைவியை பிரிந்து இருந்த மஞ்சுநாத் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மாமனார் வீட்டுக்கு வந்து மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவர் வர மறுத்து விட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. 
இந்தநிலையில் மஞ்சுநாத் வேப்பனப்பள்ளியில் இருந்து குப்பம் செல்லும் சாலையோரம் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வேப்பனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தியபோது மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் மனமுடைந்த மஞ்சுநாத் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 
இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்