கிருஷ்ணகிரியில் விபத்தில் மெக்கானிக்குகள் 2 பேர் சாவு

கிருஷ்ணகிரியில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் மெக்கானிக்குகள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2022-05-06 16:39 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் மெக்கானிக்குகள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மெக்கானிக்குகள்
கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்னமேலுப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் லோகேஸ்வரன் (வயது 23). கிட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (37). நண்பர்களான இவர்கள் 2 பேரும் இருசக்கர வாகன மெக்கானிக்குகள். இதில், லோகேஸ்வரன் பைக் ரேசில் பங்கேற்றும் வந்துள்ளார். 
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை சாலையில் தர்கா அருகே சென்று கொண்டு இருந்தனர். அப்போது தாறுமாறாக ஓடிய மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 
2 பேரும் சாவு
இதில் மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்து சென்ற அசோக்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். லோகேஸ்வரன் படுகாயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் லோகேஸ்வரனை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 
இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் நண்பர்கள் இறந்ததால் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்