கிணத்துக்கடவு, வால்பாறையில் தீ தடுப்பு ஒத்திகை

கிணத்துக்கடவு, வால்பாறையில் தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.

Update: 2022-05-06 16:31 GMT
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு, வால்பாறையில் தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. 

தீ தடுப்பு ஒத்திகை

சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினத்தினை முன்னிட்டு கிணத்துக்கடவில் உள்ள தீயணைப்பு நிலையம் சார்பில் தனியார் மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் கிணத்துக்கடவு தீயணைப்பு நிலைய அதிகாரி காளிமுத்து கலந்துகொண்டு மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள், மருந்தாளுனர்களுக்கு தீ தடுப்பு குறித்த விளக்கங்களை அளித்தார். மேலும் கியாஸ் சிலிண்டரில் ஏற்படும் தீ, வீடுகள் மற்றும் வண்டிகளில் ஏற்படும் தீயை அணைக்கும் முறைகள் குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. 
இதேபோல் வீடுகளில் கியாஸ் கசிந்தால் உடனடியாக மின்விளக்கு சுவிட்சை அழுத்தக்கூடாது. முதலில் உடனடியாக அனைத்து ஜன்னல்களையும் திறந்து வைத்து தீயணைப்புநிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர். இதில் கிணத்துக்கடவு தீயணைப்பு நிலைய அதிகாரிகள், மருத்துவமனை ஊழியர்கள் உள்பட கலந்து கொண்டனர்.

வால்பாறை

வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் வால்பாறை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தின் சார்பில் தீ தடுப்பு முறைகள் குறித்து செயல்முறை விளக்கமளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் டாக்டர்கள், செவிலியர்கள், ஆஸ்பத்திரி பணியாளர்கள் ஆகியோருக்கு தீதடுப்பு மற்றும் தீயை அணைக்கும் முறைகள் குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கமளித்தனர். தீ விபத்து ஏற்படும் போது மாடியில் உள்ள வார்டுகளில் இருந்து நோயாளிகளை எவ்வாறு காப்பாற்றுவது, தீ தொடர்ந்து பரவாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும். ஆஸ்பத்திரியில் தீ தடுப்பு கருவிகள் கட்டாயம் பொறுத்தியிருக்க வேண்டும், தீ தடுப்பு கருவிகளை எவ்வாறு கையாள்வது போன்ற பல்வேறு தீதடுப்பு முறைகளை தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்தனர். 
பின்னர் செவிலியர்களை கொண்டு தீயை அணைப்பதற்கு பயிற்சியளிக்கப்பட்டது. 

 இந்த தீயணைப்பு செயல்முறை விளக்க நிகழ்ச்சிக்கு தலைமை டாக்டர் நவரெத்தினராஜா தலைமை தாங்கினார். மகப்பேறு டாக்டர் மகேஷ்ஆனந்தி முன்னிலை வகித்தார். அரசு ஆஸ்பத்திரி பணியாளர்கள் மற்றும் உள்நோயாளிகள் பிரிவு நோயாளிகளும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்