தம்பதியிடம் நகை, பணம் அபேஸ்
மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் தம்பதியிடம் நகை, பணத்ைத திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
குழித்துறை:
மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் தம்பதியிடம் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஆட்டோ டிரைவர்
குழித்துறை அருகே உள்ள குறுமத்தூர் புல்லுவிளையை சேர்ந்தவர் டேவிட்ராஜ் (வயது54), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மேரி (50).
இவர்கள் இருவரும் வெளியூரில் நடந்த ஒரு திருமணத்துக்கு சென்றுவிட்டு நேற்று அதிகாலையில் அரசு பஸ்சில் மார்த்தாண்டம் பஸ் நிலையம் வந்து இறங்கினர். அங்கு மேரி தனது கைப்பையை அங்குள்ள இருக்கையில் வைத்துவிட்டு கணவர் டேவிட்ராஜிடம் பார்த்து கொள்ளுமாறு கூறிவிட்டு பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு சென்றார். டேவிட் ராஜ் அங்கு நின்றவாறு மனைவியின் கைப்பையை கவனித்துக் கொண்டிருந்தார்.
அப்போது எப்படியோ அவரது கவனத்தை திசைத்திருப்பி யாரோ மர்ம ஆசாமிகள் கைப்பையை திருடி சென்றுள்ளனர்.
1 பவுன் நகை-பணம்
அந்த கைப்பையில் 1½ பவுன் நகையும், ரூ.12 ஆயிரம் ரொக்கவும், ஒரு செல்போனும் இருந்தது. சிறிது நேரம் கடந்து மேரி வந்து பார்த்தபோது கைப்பையை காணாமல் திடுக்கிட்டார். அவர்கள் பக்கத்தில் நின்றவர்களிடமும், அந்த பகுதியில் உள்ள கடைகளிலும் விசாரித்து பார்த்தனர். ஆனால் அந்த கைப்பையை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் சமீபகாலமாக நாடோடி கும்பல் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அந்த கும்பல் பஸ் நிலையத்தில் அடிக்கடி இது போன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதாக பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள். எனவே, இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
---