பணி நீக்கம் செய்யப்பட்டதால் அரசு பஸ் முன்னாள் டிரைவர் தற்கொலை
பணி நீக்கம் செய்யப்பட்டதால் அரசு பஸ் முன்னாள் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு:
ராய்ச்சூர் மாவட்டம் வீராபுரா கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார். இவர், பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ்சில் டிரைவர் மற்றும் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த ஆண்டு(2021) வினோத்குமார் பணியில் இருந்து நீக்கப்பட்டார். அதாவது போக்குவரத்து ஊழியர்கள் நடத்திய போராட்டத்தில் வினோத்குமாரும் கலந்து கொண்டு இருந்தார்.
இதன் காரணமாக அவர் பணி நீக்கம் செய்யப்பட்டு இருந்தார். இதனை எதிர்த்து பெங்களூரு நுகர்வோர் கோா்ட்டில் வினோத்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில், வீராபுராவில் உள்ள தனது வீட்டில் வினோத்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் ராய்ச்சூர் புறநகர் போலீசார் விரைந்து சென்று வினோத்குமாரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
அப்போது பணி நீக்கம் செய்யப்பட்டதால், வேலைக்கு செல்ல முடியாமல் இருந்ததால் பணப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் நுகர்வோர் கோர்ட்டில் தொடர்ந்த வழக்குக்கு செலவு செய்ய பணம் இல்லாததால் மனம் உடைந்த வினோத்குமார் தற்கொலை முடிவை எடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து ராய்ச்சூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.