சமூக வலைதளங்களில் பெண்கள் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும்: போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்
சமூகவலைதளங்களில் பெண்கள் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தி உள்ளார்.
தூத்துக்குடி:
சமூகவலைதளங்களில் பெண்கள் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தி உள்ளார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி பெண்கள் ஆலோசனை குழுமம் சார்பில் ‘இன்றைய சமூக சூழலில் பெண்களின் பாதுகாப்பு” என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் வீரபாகு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், பெண்கள் நம் சமூகத்தின் ஆணிவேர். தற்போது பெண்கள் சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் சிறந்த சாதனையளர்களாக உள்ளனர். பெண்கள் குடும்பத்தை சிறந்த முறையில் கொண்டு செல்வது மட்டுமல்லாது, தாங்களும் நன்றாக படித்து சமுதாயத்தில் உயரிய பதவியிலும் இருக்கிறார்கள்.
சங்க காலத்திலிருந்து இன்றுவரை சமுதாயத்தின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியமாகும். எந்த பெண்களும் முதலில் எந்த ஒரு செயலாக இருந்தாலும் என்னால் முடியும் என்று நினைக்க வேண்டும். தைரியமாக முன்வரவேண்டும். அவ்வாறு வந்தால் மட்டுமே அவர்கள் சாதனையளர்களாக மாற முடியும். பெண்கள் பிரச்சினைகள் மற்றும் தோல்விகளை கண்டு பயந்து தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை முற்றிலும் கை விட வேண்டும். கல்வி ஒன்றுதான் பெண்களை சாதனையாளர்களாக மாற்றும்.
சமூக வலைதளம்
பெண்கள் தங்களது செல்போன்களுக்கு தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகளுக்கு பதில் அளிக்க வேண்டாம். மேலும் சமூக வலைதளங்களில் தேவையில்லாமல் தங்கள் புகைப்படங்கள் சுய விவரங்களை பதிவேற்றுவதை தவிர்க்க வேண்டும். உங்களுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் என்றால் தைரியமாக போலீசிடம் புகாரளிக்க முன் வரவேண்டும். உங்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். விளையாட்டில் எப்படி விதிமுறைகளை கடைபிடித்து விளையாடினால் வெற்றி பெற முடியுமோ அதே போல் வாழ்க்கையிலும் சில விதிமுறைகளை கடைபிடித்து நமது குறிக்கோள்களை அடைந்தால் நமது வாழ்க்கை சிறப்பாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஞானராஜ் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.