‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-05-06 14:18 GMT
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குவிந்து கிடக்கும் குப்பைகள்

பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி எதிரே செல்லும் இங்கிலீஷ் சர்ச் சாலையில் ரோட்டின் ஓரம் குப்பைகள் சரிவர அள்ளப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்வோரை முகம் சுளிக்க வைக்கிறது. எனவே, குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
சாம், பரணிநகர்.

குடிநீர் குழாயில் உடைப்பு
நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம்- கொத்தன்குளம் இடையே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் தார்சாலை குண்டும் குழியுமாக மாறி தண்ணீர் தேங்கி கிடப்பதால் வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் இடையூறாக உள்ளது. கடந்த சில மாதங்களாகவே இந்த நிலை நீடிக்கிறது. எனவே, குழாய் உடைப்பை சரிசெய்து, சாலையையும் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெபஸ்டின், கோபாலசமுத்திரம்.

புதர்களால் மூடப்பட்ட குடிநீர் வால்வு தொட்டி
நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் இருந்து மேற்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் வள்ளியூர்- திருச்செந்தூர் மெயின் ரோட்டின் ஓரம் குடிநீர் வால்வு தொட்டி அமைந்துள்ளது. இந்த தொட்டி மூடியில்லாமல் காலப்போக்கில் புதர்களால் மூடப்பட்டு உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்கள் லேசாக ரோட்டோரம் இறங்கினாலும் பள்ளத்தில் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. இதேபோல் அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் மடப்புரம் என்னும் இடத்தில் செம்பாடு ஊருக்கு கிளை ரோடு பிரியும் இடத்தில் மற்றொரு தொட்டியும் உள்ளது. எனவே, இரண்டு தொட்டிகளுக்கும் மூடி போடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மரியான், துரைகுடியிருப்பு.

குண்டும் குழியுமான சாலை
நெல்லை பேட்டை- சேரன்மாதேவி சாலையில் உள்ள பெரியார் நகரில் இருந்து பாரதிநகர் ரெயில்வே சுரங்கப்பாதை வரை செல்லும் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ராமசுப்பிரமணியன், கூனியூர்.

குரங்கு தொல்லை
ராதாபுரம் தாலுகா விஜயாபதி பஞ்சாயத்து ஆவுடையாள்புரத்தில் தினமும் குரங்கு ஒன்று வந்து செல்கிறது. வீடுகளுக்குள் புகுந்து குழந்தைகள், பெண்களை அச்சுறுத்துவதால் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே, குரங்கை பிடித்துச் செல்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

வாறுகால் வசதி
தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் முதலியார்பட்டி பஞ்சாயத்து காந்திநகர் 1-வது தெருவில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல முறையான வாறுகால் வசதி, சிமெண்டு சாலை வசதி இல்லை. பல வருடங்களாக மண் சாலையாகவே உள்ளது. லேசான மழை பெய்தாலும் மழைநீரும், கழிவுநீரும் சேர்ந்து சாலை சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, இந்த பகுதியில் கழிவுநீர் செல்ல வாறுகால் வசதி ஏற்படுத்தவும், சிமெண்டு சாலை அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
அம்ஜத், முதலியார்பட்டி.

ஆபத்தான மின்கம்பம்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் சுடலை மாடசாமி கோவில் அருகே மின்கம்பம் உள்ளது. தற்போது மின்கம்பத்தின் காங்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் முழுவதும் வெளியே தெரிகிறது. இதனால் ஏதேனும் விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பாக அந்த மின்கம்பத்தை மாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
கந்தசாமி, குலசேகரன்பட்டினம்.

காட்சி பொருளான அடிபம்பு

விளாத்திகுளம் பேரூராட்சி 5-வது வார்டு கத்தாளம்பட்டியில் குடிநீர் தொட்டி அருகே உள்ள அடிபம்பு பழுதடைந்து பல மாதங்களாக காட்சி பொருளாகவே உள்ளது. மேலும், காலனி தெருவில் அமைந்துள்ள மற்றொரு அடிபம்பும் பல மாதங்களாக செயல்படாமல் மண்ணோடு மண்ணாக புதைந்து விடும் சூழ்நிலையில் உள்ளது. கோடை காலமாக இருப்பதால் தண்ணீருக்காக மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, அடிபம்புகளை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேஷாக், கத்தாளம்பட்டி.

மேலும் செய்திகள்