முத்தையாபுரத்தில் லாரி டிரைவரிடம் செல்போன் பறிப்பு: 2 பேர் சிக்கினர்
முத்தையாபுரத்தில் அரிவாளை காட்டி மிரட்டி டிரைவரிடம் செல்போனை பறித்து சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
ஸ்பிக் நகர்:
முத்தையாபுரத்தில் அரிவாளை காட்டி மிரட்டி டிரைவரிடம் செல்போனை பறித்து சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
லாரி டிரைவர்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா கீழகண்டமங்கலத்தைச் சேர்ந்த வீரபாண்டி மகன் கணேஷ் பாபு (வயது 25). இவர் நேற்று முன்தினம் லாரியில் லோடு ஏற்றுவதற்காக முத்தையாபுரம் எடை நிலையம் அருகே லாரியை நிறுத்தி விட்டு, அதில் படுத்திருந்தாராம். அன்று நள்ளிரவில் 2 மர்ம நபர்கள் லாரியில் ஏறி அவரிடம் அரிவாளை காட்டி மிரட்டி செல்போனை பறித்துக் கொண்டனர். அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போடவும், அக்கம் பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர். இதை பார்த்த மர்ம நபர்கள் 2 பேரும் செல்போனுடன் உப்பளம் வழியாக தப்பியோடியுள்ளனர்.
இது குறித்து கணேஷ் பாபு கொடுத்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் உப்பாற்று ஓடைப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர். அதனைத் தொடர்ந்து 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
2 பேர் கைது
விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி சக்திநகர் 2-வது தெருவை சேர்ந்த நாகேந்திரன் மகன் வேல்முருகன், மற்றொருவர் பிரையண்ட் நகர் 7-வது தெருவை சேர்ந்த சுடலை மகன் முருகன் என்பதும், லாரி டிரைவரிடம் செல்போன் வழிப்பறி செய்ததும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து முத்தையாபுரம் போலீசார் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.