மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. அப்போது அவர்களை போலீசார் தடுத்ததால் தரையில் அமர்ந்து கோஷமிட்டனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. அப்போது அவர்களை போலீசார் தடுத்ததால் தரையில் அமர்ந்து கோஷமிட்டனர்.
மனு கொடுக்கும் போராட்டம்
திருவண்ணாமலை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று நீர்நிலை மற்றும் கோவில் நிலங்களில் குடியிருக்கும் ஏழை மக்களை வெளியேற்றும் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும், பலவகை நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க கோரியும் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் பிரகலநாதன், வாசுகி, ராமதாஸ், லட்சுமணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக அவர்கள் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் இருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியபடி கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர்.
கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த அவர்களை நுழைவு வாயில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர்.
தரையில் அமர்ந்து கோஷம்
பின்னர் போலீசார் குறிப்பிட்ட நபர்களை மட்டுமே உள்ளே சென்று மனு அளிக்க வலியுறுத்தினர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் மனு அளிக்க உள்ளே செல்வோம் என்று கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அவர்கள் நீர்நிலை மற்றும் கோவில் நிலங்களில் குடியிருக்கும் ஏழை மக்களை வெளியேற்றும் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும், பலவகை நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க கோரியும் கோஷங்கள் எழுப்பினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டு அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் சென்றனர்.
நிர்வாகிகள் மூலம் மனுக்கள் மொத்தமாக சேகரிக்கப்பட்டு கலெக்டர் முருகேசிடம் வழங்கினர்.
இதில் திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம், கீழ்பென்னாத்தூர், தண்டராம்பட்டு, செங்கம், கலசபாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கட்சியினர் என 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ஆரணி
இதேபோல் ஆரணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இணைந்து ஆரணி, போளூர் வட்டார குழுக்கள் சார்பாக ஆரணி வருவாய் கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
முன்னதாக ஆரணி வட்டார செயலாளர் சி.ரமேஷ்பாபு தலைமையில் ஆரணி அண்ணா சிலை அருகில் இருந்து ஊர்வலமாக 500-க்கும் மேற்பட்டோர் வந்தனர்.
ஊர்வலம் காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு, பழைய பஸ் நிலையம், கோட்டை தெரு வழியாக ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வந்தடைந்தனர். அங்கு வருவாய் கோட்டாட்சியர் கவிதா இல்லாததால் அவரது நேர்முக உதவியாளர் மூர்த்தியிடம் வருவாய் கோட்டாட்சியர் வரும் வரை தரையில் அமர்ந்து போராட்டம் நடத்துவோம் என முகப்பு வாயில் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் கோகுல்ராஜன், சாலமோன்ராஜா, பி.புகழ், தாசில்தார் தனபால் ஆகியோர் வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மனுக்களை பெற்றனர்.
சுமார் ஒரு மணி நேரம் போராட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.