பாதியில் நிறுத்தப்பட்ட நரிக்குறவர்கள் கைவினை பொருட்கள் விற்பனை வளாகம்

திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் பாதியில் நிறுத்தப்பட்ட நரிக்குறவர்கள் கைவினை பொருட்கள் விற்பனை வளாகத்தை இன்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2022-05-06 13:07 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் பாதியில் நிறுத்தப்பட்ட நரிக்குறவர்கள் கைவினை பொருட்கள் விற்பனை வளாகத்தை இன்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மதுபிரியர்களின் கூடாரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், தண்டராம்பட்டு ஒன்றியங்கள் மற்றும் செங்கம் பேரூராட்சி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

 இவர்கள் பயன்பெறும் வகையில் திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டம் 2019-20-ன் கீழ் நரிக்குறவர் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் மாநில திட்ட குழுவினால் ரூ.40 லட்சம் மதிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு நரிக்குறவர்களின் கைவினை பொருட்கள் விற்பனை செய்ய விற்பனை வளாகம் அமைக்கும் பணி நடைபெற்றது.

இதன் மூலம் அவர்களின் உற்பத்தி பொருட்கள் தரமான முறையில் பேக்கிங் செய்யப்பட்டு விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டது. 

இந்த விற்பனை வளாகத்தில் 10 கூடாரங்கள் அமைக்கப்பட்டு அதிலேயே பொருட்களை சேமித்து வைக்கும் வகையில் சேமிப்பு கிடங்கும் சேர்த்து கட்டப்பட்டது. 

கொரோனா பரவல் காரணமாக அந்த விற்பனை வளாகம் கட்டுமான பணி கூடாரங்களுடன் நிறுத்தப்பட்டு சுற்றி சுற்று சுவர் அமைக்கப்படாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தற்போது அந்த விற்பனை வளாகம் எந்தவித பயன்பாட்டிலும் இல்லாமல் மதுபிரியர்களின் கூடாரமாக மாறியுள்ளது. 

இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

அதிகாரிகள் ஆய்வு

பல லட்சம் ரூபாய் செலவு செய்து இந்த பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் முருகேசுக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர்.

இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் இன்று திருவண்ணாமலை மகளிர் திட்ட இயக்குனர் சையத்சுலைமான், மாவட்ட ஊராட்சி குழு செயலர் அறவாழி, மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர்கள் பெருமாள், சந்திரகுமார், புள்ளியியல் அலுவலர் சரவணன் உள்பட அலுவலர்கள் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

பின்னர் அவர்கள் கூறுகையில், ரூ.40 லட்சம் மதிப்பில் விற்பனை வளாகத்தில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் இதனை சுற்றி சுற்றுச்சுவர், மின் கம்பம், தரை தளம் அமைக்க விவரங்கள் சேகரிக்கப்பட்டு திட்ட மதிப்பீடு தயார் செய்ய ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. 

திட்ட மதிப்பீடு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் அரசு உத்தரவின் பேரில் பணிகள் நடைபெறும் என்றனர்.

மேலும் செய்திகள்