கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் வரும் 9-ந் தேதி தமிழக எல்லை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2022-05-06 13:04 GMT
கோடை வெயில்

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 1983-ம் ஆண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி ஆந்திரா அரசு வருடந்தோறும் தமிழகத்திற்கு 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். இதற்காக கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரி வரை 177 கிலோ மீட்டர் தூரத்திற்கு திறந்தவெளி கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கால்வாய் ஆந்திராவில் 152 கிலோ மீட்டர் தூரத்துக்கும், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ளது. கோடை வெயில் காரணமாக தற்போது பூண்டி ஏரி நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த மாதம் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர்.

தண்ணீர் திறப்பு

இந்தக் கோரிக்கையை ஏற்று நேற்று காலை 11 மணிக்கு கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்தத் தண்ணீர் வரும் 9-ந் தேதி தமிழக எல்லையான தாமரை குப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு அடுத்த வாரம் தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக ஆந்திரா மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் 2 நாட்களுக்கு முன் அறிவித்தனர். ஆனால் பூண்டி ஏரியின் தண்ணீர் இருப்பு குறைந்து வருவதை கருத்தில் கொண்டு முன்கூட்டியே பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதாக அந்த மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்