மாமல்லபுரத்தில் மத்திய மறைமுக வரிகள், சுங்கத்துறை உயர் அதிகாரிகள் 2 நாள் மாநாடு

மத்திய மறைமுக வரிகள், சுங்கத்துறை உயர் அதிகாரிகள் 2 நாள் மாநாடு மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கியது. மத்திய வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ் மாநாட்டை தொடங்கி வைத்தார்.

Update: 2022-05-06 03:49 GMT
சென்னை, 

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் குறித்து விவாதிக்கவும், நடப்பு நிதி ஆண்டுக்கான செயல் திட்டத்தை உருவாக்கவும் சுங்கத்துறை முதன்மை தலைமை கமிஷனர்கள், தலைமை கமிஷனர்கள், ஜி.எஸ்.டி. முதன்மை இயக்குனர் ஜெனரல்கள், இயக்குனர் ஜெனரல்களின் வருடாந்திர 2 நாள் மாநாடு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கியது.

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் தலைவர் விவேக் ஜோக்ரி வரவேற்று பேசினார். அப்போது அவர், 2021-22-ம் நிதி ஆண்டின் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் சாதனைகளை எடுத்துக்கூறினார். வரி ஏய்ப்பை கண்டறிய மேற்கொள்ளப்படும் புதிய தொழில்நுட்பம், போலியான ரசீதுகள், போதைப்பொருள் கடத்தலை கண்டுபிடிப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும், வரி செலுத்துவோருக்கான விழிப்புணர்வு, வருவாயை பெருக்கும் நடவடிக்கை குறித்தும் பேசினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய அரசின் வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ், குத்துவிளக்கேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார்.

மாநாட்டில் அவர் பேசும்போது, ‘மிகச்சிறப்பான முறையில் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கவாரியம் செயல்பட்டு வருகிறது. இதற்காக தங்களை அர்ப்பணித்து வரும் அலுவலர்களை பாராட்டுகிறேன். கொரோனா தொற்று சூழ்நிலையிலும் கடந்த நிதி ஆண்டில் ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 540 கோடி வருவாய் ஈட்டியதற்காக நிதி மந்திரியிடம் இருந்து விருது பெற்றமைக்காக அனைவருக்கும் பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார்.

மறைமுக வரிகள் மற்றும் சுங்கவாரியத்தின் செயல்திறனை மேம்படுத்துவது, தீர்வு விவகாரத்தில் புதுமையை புகுத்துதல், வருவாயை உயர்த்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், தணிக்கை மற்றும் விசாரணைகளை ஒழுங்குபடுத்துதல் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் (வெள்ளிக்கிழமை) மாநாடு நடக்கிறது.

மேலும் செய்திகள்