ஆவடியில் ஆட்டோ டிரைவருக்கு கத்தி குத்து
ஆவடியில் ஆட்டோ டிரைவரை கத்தி குத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
ஆவடி,
ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பிரசாத் (வயது 27). ஆட்டோ டிரைவர். இவர் அடிக்கடி சாப்பிடுவதற்காக செல்லும் ஆவடி-பூந்தமல்லி சாலையில் உள்ள ஒரு பரோட்டா கடைக்கு நேற்று முன்தினம் இரவு சென்றுள்ளார். அப்போது அங்கு பரோட்டா சாப்பிட்டு விட்டு சில்லரை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடையின் உரிமையாளரான ஆவடி பழைய அக்ரகாரம் தெருவை சேர்ந்த கபில்சிங் (வயது 27) என்பவர் பிரசாத்திடம் பணம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது கபில்சிங் காய் நறுக்கும் கத்தியை எடுத்து பிரசாத்தின் முதுகில் குத்தியுள்ளார். பின்னர் கொதித்துக் கொண்டிருந்த எண்ணெயை எடுத்து பிரசாத்தின் முகத்தில் ஊற்றியுள்ளார். இதில் பிரசாத்தின் முகம், கழுத்து, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பிரசாத் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று காலை கபில்சிங்கை கைது செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.