431 கிலோ இரும்பு திருடிய வாலிபர் கைது
431 கிலோ இரும்பு திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி:
திருச்சி அம்பிகாபுரம் சாலையில் தங்கேஸ்வரி நகரில் சர்புதீன் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு கடையில் கடந்த 2-ந்தேதி 131 கிலோ பழைய இரும்பு, 250 கிலோ இரும்பு மற்றும் ரூ.3,600 ஆகியவற்றை வாலிபர் ஒருவர் திருடிச்சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில் திருச்சி கீழ அம்பிகாபுரம் இந்திராநகரில் உள்ள பழைய இரும்பு கடையில் நேற்று முன்தினம் காலை ஒரு வாலிபர் 50 கிலோ இரும்பை திருடிக்கொண்டு இருந்தார். இதைப்பார்த்த கடை உரிமையாளர் வினோத் (வயது 34) அந்த வாலிபரை கையும், களவுமாக பிடித்து அரியமங்கலம் போலீசில் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில், அவர் இனாம்குளத்தூர் பகுதியை சேர்ந்த முகமது கனிபா(19) என்பதும், இவர்தான் சர்புதீனின் கடையில் இரும்பு திருடியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 431 கிலோ இரும்பு மற்றும் பணத்தை மீட்டனர்.